Sunday, February 10, 2008

காரு வாங்கின கதை(நண்பர் கல்யாணத்துக்கு,போன படலம்

ரமேஷ்,ரமேஷ்ன்னு ஒரு நண்பனுங்க,அவன் ஊரு நம்ம காரமடைங்க...அங்க அவரு அண்ணனுக்கு கல்யாணம்னு,எங்களுக்கு பத்திரிக்கை கொடுத்துட்டு,"ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடியே நம்ப பசங்களோடு வந்துருடா மாப்பிளே..." அப்பிடினு வந்து நிக்கிறான்...

அவனுக்கும்,எங்களுக்கும் உள்ள நட்ப பத்தி,இன்னைக்கு நெனச்சாலும் புல்லரிச்சுப்போகும்...

பீர்ல நாங்க பெப்ஸிய கலக்கி குடிச்சகாலத்திலே,அவன் அத ராவா குடிச்ச ஆளூ...

அப்பிடிபட்ட ஆளோட அண்ணண் எப்பிடியிருப்பான்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க...

...அவிங்க அய்யா மிராசுதாரரா இருக்கிறதால அவனும்,அவன் அண்ணனும் "விட்டுக்கு ஒருத்தரு வேல பாத்தா போதும்..."ங்கிற கொள்கைல ரொம்ப புடிப்பா இருக்கிற ஆளுங்க...

சரி,நம்ம கதைக்கு வருவோம் நமக்கு சந்தோஷம்,தலகால் புரியல போங்க...அத முன்னிட்டு அன்றும் அமராவதிதேன்...அன்னைக்கும் ஆளுக்கு ஆறேழு பீர அடிச்சு அளப்பற பண்ணியாச்சு போங்க....

"எந்த வண்டியில போறது...யார் வண்டியில போறது...என்ன கிஃப்ட் வாங்கிறது..." இப்படினு நடந்த மந்திராலோசனை முடிவில்லாம போய்கிட்டேயிறுக்கு...கடைசில புது மணத்தம்பதிக தேனிலவுக்கு ஊட்டில ஒரு வாரத்துக்கு தங்க ஒரு கொட்டக(cottage)கிஃப்டா கொடுக்கறதா முடிவு பண்ணியாச்சு...

ஆன வண்டி மட்டும் எதுன்னு முடிவாகலை...காரு வச்சிருக்கறவங்கள்ள கார்த்தி,ரவி,பாலு மற்றும் ஹி..ஹி...நான்...

நமக்கு போட்டியாத்தான் மூணு பயபுள்ளக இருக்காங்களேன்னு,எனக்கு வருத்தமாவும்,கடுப்பாவும் இருக்கு...("அஹா...நாம காரு வாங்கினத இந்த ஊரு ஒலகத்துக்கு காட்டறதுக்காக கடவுளா பாத்து இந்த கல்யாணத்த ஏற்பாடு செஞ்சிருக்கார் போல"ன்னு,நெனைச்சுக்கிட்டு இருக்கேன்)...

கார்த்தி வண்டிய(Esteem)எடுத்துக்கலாம்னு முடிவுபண்றமாரி தெரியுதுன்னு...

நாங்க போன தடவ கொடைக்கானலுக்கு போய்வந்ததை ஞாபகபடித்தி பலமா ஆட்சேபத்தை தெரிவித்தேன்...

கொடைக்கானலில் நடந்த பிளாஷ்பேக் என்னன்னா...

போகும் போது ஒரு பிரச்சினையுமில்ல...வரும்போது ஆர்வக்கோளறுல "நான் ஓட்டறேன்"னு சொல்லி,கார்த்தி ட்ரைவர் சீட்டுல ஒக்காந்துகிட்டு(அவன் அடிச்ச ஆறு கிங்ஃபிஷர்)அடம் புடிச்சதால...

சரின்னு...எல்லாப் பயலுவலும் ரொம்ப ஜக்கிரதையா...வண்டியவிட்டு எறங்கிட்டு ஓட்டுன்னு விட்டுடோம்ங்க...ஒடனே ...ஊட்டு செவுத்துல ஒட்டிவசிருக்கிற நரேன் கார்த்திகேயன்,ஞாபகம் வந்துருசு போலங்க...கண்ண மூடிமூடி தெறந்துகிட்டே,ஆனது ஆச்சுன்னு,கிளச்ச புடிச்சு,கியர போட்டுட்டானுங்க...

ஆனா...வண்டி கிளம்பவேயில்லைங்க...

அப்புறம்...அப்புறமென்ன,மெக்கானிக் வந்து,ஒரு நாளாச்சுங்க...வண்டிய கிளப்ப...

பின்னே,கியர் ராடு கியர் பாக்ஸுல சேர்ர எடத்துல
ஒரு கம்பி(cotter pin)இருக்குமாமே அது ஒடஞ்சு போனா...?

அதோட,மெக்கானிக் "என் இத்தினி வர்ஷ எக்ஸ்பீரியன்ஸுல இந்த பின் ஒடஞ்சு பார்த்ததே இல்லை" ன்னு வேற பேசிகிட்டே இருக்கார்.

அப்புறமென்ன,ஊரு வரவரைக்கும் பசங்க துப்புன துப்பு கொஞ்சநஞ்சமில்லைங்க...!

அத காரணங்காட்டி,அந்த (Esteem)ராசி இல்லைடான்னு...வேக வேகமா அதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வெச்சச்சு...

அப்புறம்,ரவி வண்டி...

அத பத்தி பேசுனப்ப...அவிங்க அப்பாரு "வண்டிய கெணத்துல போட்டாலும் போடுவேன்...?உனக்கு மட்டும் ஓட்டறதுக்கு தரமாட்டேன் "னு ரவி மேலேயே சத்தியம் பண்ணினதை பார்த்ததாக திருவாளர்.கே.(டி).குப்புச்சாமி சொன்னதை,ரவியும் ஒத்துக்கொண்டான்.

பின்னே,அவருக்கு என்ன பயித்தியமா...எங்கள நம்பி வண்டிய கொடுக்க...

இங்கேயும் ஒரு பிளாஷ்பேக்:

எங்க ஊருக்கு பக்கத்திலே...முணாறுக்கு பக்கமா...பொங்கன் ஓடைன்னு ஒரு ஓடை இருக்குத்துங்க...அங்க சாதாரணமா சாயந்திர நேரத்துல்ல ஆனை,மானுன்னு காட்டுவிலங்குகளும் ...சிலநேரங்களில் எங்களைப்போன்ற வீட்டு விலங்குகளும்(!)தாகத்திற்கு தண்ணியடிக்க வர்றதுண்டுங்க....

அப்படிபட்ட ஸ்தல பெருமை வாய்ந்த இடத்தில் ...

ஒரு மாலை மயங்கின அல்லது மயங்கின மாலைப்பொழிதில் ...

நாங்க அஞ்சுபேரும்,ரவி காருல வந்து,கார நல்ல ஓரமா (ரோட்டுல யார் வந்தாலும் சும்மா 'பளிச்சுனு' தெரியுற மாதிரி)பார்க் பண்ணிட்டு...

அங்கேயே... நல்ல மேடுபள்ளங்களோடு கூடிய புல்வெளியும்,மரநிழலும்...உருண்டை மற்றும் தட்டையான... சின்னதும் பெரியதுமான பாறைகளுக்கிடையே...தனற்கடியில் இருக்கும் கூழங்கற்களோடும்...தன்னுள் இருக்கும் குட்டிகுட்டி மீன்களோடும்...சலசலன்னு ஓடற ஓடையுமாக...

மொத்ததில் மிக அற்புதமான இடமாக இருந்ததால்...கொண்டுவந்திருந்த நீராகாரங்களோடு(!)பட்டறய போட தயாராகும்போது...

நம்ம திருவாளர் கே.(டி).குப்புச்சாமி "இது என்ன எடம்...?இப்படியே ஓடை ஒரமா,ஒரு அரைக்கிலோமீட்டர் போனா,ஒரு எடம் வரும்பாரு...எடமுனா எடம் அப்படியொரு எடம்..." ன்னான்.

ஒடனே...எல்லாரும் போருக்கு போகிற வீரருக மாதிரி,அத்தினி பாட்டல்களையும் தூக்கிகிட்டு கிளம்பியாச்சு...ஏகப்பட்ட கற்பனையில(குயில் கூவுறதும்,மயில் ஆடறதும்)போறோம் போறோம் போயிகிட்டே இருக்கிறோம்...

ஒரு மூணு ,நாலு கிலோமீட்டரு இருக்கும்...எல்லாருக்கும் நாக்கு தள்ளிப்போச்சுங்க...கடைசில பாத்தா...

யப்பா...

கால வச்சா இடுப்புவரைக்கும் உள்ள போயிரும் போல,அந்த அளவுக்கு சேறும் தண்ணியுமா கண்ணுக்கு எட்டினவரை இருக்கு...( அன்னைக்கு குப்புச்சாமி எங்க கிட்டயிருந்து உயிர் தப்பினது அவன் பண்ணிய புண்ணியத்தாலயா(!)... இல்ல...எங்களவிட
வேகமா ஓடினதாலயான்னு... இன்னமும் நேரங்கெடைக்கும்போதெல்லாம் நாங்க பேசிக்கறதுண்டு)

நேரம்வேற ஏழு,ஏழர ஆகிவிட்டபடியாகையால்...

என்ன பண்ணறது...ஷூக்களை கழட்டி தோள்ல போட்டுக்கிட்டு...கொண்டு வந்தத திரிப்பி சுமக்க விருப்பமில்லாததால்...நடந்துகிட்டே தாகசாந்தி பண்ணிகிட்டு வந்துகிட்டிறுக்கிறோம்...

நாங்க கெளம்பிவரும்போது கழட்டிவிட்டுட்டு வந்த ரவியோட தம்பி உட்ட சாபந்தா இப்படி ஆயிப்போச்சுன்னு...பேசிகிட்டே ரோட்டுக்கு ஒருவழியா வந்து சேந்தாச்சுங்க...

ரோட்டுல பாத்தா...எங்க எல்லாருக்கும் ஹார்ட்டே நின்னு போச்சுங்க...ரவிக்கு... ஒன் பாத்ரூமே வந்துருச்சுங்க...ஏன்னா...?

நம்ம கேப்டன் பிரபாகரன் படத்துல வீரபத்திரன புடிக்க போலிசெல்லாம் தலையில லைட்ட மாட்டிகிட்டு தேடிட்டு வருவாங்கில்ல...அதமாதிரி...ஒரு ஆறேழு ஃபாரஸ்ட்டு ஆஃபிஸருங்களும்...

எல்லாத்துக்கும்மேல...

ரவியோட அப்பாவும்,கண்ணுல கண்ணீரோட... தலைல லைட்ட போட்டுக்கிட்டுறுக்கிறதோடல்லாமல்... அத ஆன்,ஆஃப் (!)வேறு பண்ணி பாத்த்துகிட்டிருக்காறு...

அப்புறம் என்ன...?அதுக்கப்பறம் எங்களுக்கு நார்மலா ஹார்ட் அடிக்கவும்,ரவிக்கு நார்மலா ஒன் பாத்ரூம் போகவும் ஒரு வாரமாச்சுங்க...அந்த அளவுக்கு வீட்டுல ட்ரீட்மெண்டுதேன்(!)...

எங்க பசங்க அளவுக்கு(!) ரவியோட அப்பா ஃபேமஸ் இல்லட்டினாலும்...ஏதோ தாலுக்கா ஆஃபிஸுல "தாசில்தாரரா" வேலபாக்குறதனால... அவரு கார பத்தி இந்த ஃபாரஸ்டு, போலிசுக்கெல்லாம் கொஞ்சம் தெரியும் போல...அவரு வண்டிய நடுக்காட்டுல பாத்தொன்ன,அவருக்கு கூப்பிட்டு சொல்லிட்டாங்க...சேந்தாப்போல நாங்க கதற கதற உட்டுட்டுவந்த ரவியோட தம்பியான அந்த பயபுள்ளயும் போட்டுகொடுத்துட்டாங்கிற... உண்மயும் அப்புறமா,மெதுவாத்தேன்... கட்டில்ல மல்லாக்க படுத்துகிட்டு,மேல ஓடுற ஃபேன பாத்துகிட்டே... யோசிச்சபின்னாடி தான்...எங்க அறிவுக்கு வெளங்கிச்சுங்க...

சரி...

ஆனது ஆச்சு,போனது போச்சுன்னு...இவ்வளவு பாதிப்பு,சேதாரத்திற்கு அப்புறம் கலைக்கப்பட்ட சங்கம் மறுபடி செயல்பட ஆரம்பிச்சது இப்பத்தான்...

சரி...ஓக்கே... இனிமே நாம,நம்ம கால்லதான் நடக்கணும்...போனா நம்ம கார்லதான் போகணும்...

அதனால யாரு வண்டியும் வேண்டாம்...

நம்ம வண்டி இருக்கும்போது எதுக்கு கவலப்படணும்னு...

சந்தடி சாக்குல ஒரு பிட்ட போட்டுட்டு...பசங்க ரியாக்க்ஷன அப்படியே மெதுவா பார்த்தேன்...

எல்லாப் பயலுவலும் என்ன பார்த்த பார்வயில..." அடி ஆத்தி,இனிமேலு இவிங்ககூட தனியாவர்றத பத்தி யோசிச்சுத்தான் செய்யணும் போல"ன்னு நெனைக்கிறளவுக்கு ஆயிப்போச்சுங்க.

எல்லா பயபுள்ளைகளும் பலமா யோசிக்குதுக...

கொஞ்ச நேரங்கழித்து கார்த்தி மெதுவா,தயங்கித் தயங்கி...

நாம பேசாம ஒரு வாடகக்கார எடுத்துட்டு போலாம்...அப்படிங்கிறான்...

இது என்னடா,மதுரைக்கு வந்த சோதனைன்னு நான் நெனச்சுகிட்டு...

அவனுங்க யோசிக்கிறது என்னன்னா...என் கார அவனுங்க ஒரு காரா மதிக்கவேயில்லன்னு...நல்லா தெரியுது...இருந்தாலும் "கழுதைகளுக்கு தெரியுமா கற்பூற வாசனை"ன்னு நான் எனக்குள்ளாறயே சொல்லிட்டு,

நம் திருவாளர் கே.(டி).குப்புச்சாமிய பார்த்தேன்...

அவன்,தான் கழுதையில்லை,என்பதை நான் ஒத்துக்கொள்ளும் விதமாக,
"நண்பர்களே,அடுத்தவன் கார்ல போறதவிட நம்ம வண்டியில போறது எவ்வளவோ நல்லது...அதுமட்டுமில்லாமல்,இது நமது நண்பர் சுயமாக சம்பாரித்து வாங்கின வண்டியாகையால்..." அப்படின்னு என்னென்னவோ பேசினதாகையால் எல்லோரும் ஒரு வழியாக ஒத்துக்கொண்டனர்

அன்று நடந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் கீழ்க்கண்டவாறு முடிவுசெய்யப்பட்டது:

வண்டியை நல்லமுறையில் வாட்டர் சர்விஸ் செய்வதாகவும்,என்ஜின் முதற்க்கொண்டு வண்டியின் எல்லா பாகங்களையும் முழுதாக சோதனை செய்வதாகவும்,வண்டியில் புது பாடுபொட்டி இல்லாததால் புது பாடுபொட்டி அமைப்பதாகவும்,வண்டிக்கு பெட்ரோல் மற்றும் அவர்களுக்கான(!) பெட்ரோல் செலவும் என்னுடயதென்றும் ,எல்லாவற்றிக்கும் மேலாக.. வண்டியை நான் ஓட்டறேன்னு,கீழே...தரையில் படுத்து புரண்டால் கூட ஏற்றுக்கொள்ளப்படாதென்றும்,அதற்காக,கெட்ட வார்த்தைகளில் எல்லாம் திட்டக்கூடதென்றும்
(?),இப்படி பல நிபந்தனைகளை...

நான் நிபந்தனை இன்றி ஏற்றுக்கொண்ட பிறகு ....ஏங்காருலயே காரமட கல்யாணத்துக்கு போறதுன்னு ஏகமனதா முடிவாயிருச்சுங்க...

(வரும் வாரம்...காரமட கல்யாணத்துக்கு என் காரில் போன வாஆஆஆஆ...ரம்)

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in