Sunday, January 27, 2008

காரு வாங்கின கதை.

(இது நடந்து வருஷம் 12 ஆச்சுங்க,இருந்தாலும் இன்னக்கி இத நெனைச்சாலும் தூக்கம் வரமாட்டேங்குதுங்க...அத நீங்களும் தான் தெருஞ்ச்சுக்கங்களேன்...)

எல்லோரும் காரு வாங்கிட்டாங்க... நாம மட்டும் என்ன மட்டமான்னு ஒரு பத்து நாளாவே மனசுல ஒரு வெசனம் வந்துருச்சுங்க...

ஏற்கனவே இடுப்பு வரைக்கும் எறியிர நெருப்புல நம்ம ராமர்ப்பிள்ளை தயாரிச்ச மூலிகை பெட்ரோல் ஒரு முழு பேரல ஊத்துனமாதிரி ஒடனே அணைஞ்சுப்போச்சு ...

என் நண்பன் திருவாளர் கே(டி).குப்புச்சாமி அவர்களும் ஒரு அம்பாசடர் கார,ஒன்ஸ் அப்பான் எ டைமுல,இந்தியாவுல அம்பாசடர்ன்னு ஒரு லாரி மன்னிக்கவும்,காரு இருந்தது இப்ப என்சோட்டு மக்களுக்கு தெரிந்து இருக்கும்,தெரியாதவங்க பெரியவங்கள கேட்டுத்தெருஞ்சுக்கங்க...

இரண்டாம் கையா(அதாங்க..ஸெகண்ட் ஹேண்ட்)ரூவா 38200/-(ரூபா முப்பத்தி எட்டயாரத்து இருநூறு மட்டும்...சத்தியமா இப்படிதாங்க செக் எழுதினான்)வாங்கிட்டாருங்க...டாருங்க என்ன டானுங்க...(வயித்தெருச்சலுன்னு...நீங்க இப்படி ஏங்காது படவே சொல்றது அவ்வளவு நல்லாயில்லங்க...)

வாங்கனதோடல்லாம,அத எடுத்துக்கிட்டு ஒரு நாளைக்கு நாளு தடவ என் ஆபிசுக்கு வந்து,விரல்ல காரு சாவிய சுத்திக்கிட்டே"மாப்பிளேய்,காபி சாப்பிடப்போலாம் வர்றியான்னும் ...

இந்த பக்கம் ஒரு வேலைய வந்தேன் அப்படியே ஓ நாபகம் வந்ததுன்னும்...(என் ஆபிசுக்கும் அவன் வீட்டுக்கும் நடுவுல மொத்தமே முணு வீடுதான்ங்கிற தகவல் உங்களுக்குக் தெரியாது இல்லியா) பண்ண டார்ச்சரு ஒரு கணக்குவழக்கே இல்லாம போயிர்ருச்சு.

அதுமட்டுமில்லாம என் ஆபிசுல இருந்த பொண்ணுக அவன் வந்ததும் வராததுமா, "காபி சாப்பிடுங்க"ங்கறதும் அவன் இல்ல இப்பத்தான் சாப்பிட்டங்கறதும்...(இதே மொதல்ல அவன் காபி வேணுமினு கேட்டாக்கூட,அவிங்க காது என்னமோ பிறவியிலிருந்தே கேக்காது மாதிரி இருப்பாங்க)என் வயித்தெரிச்சல கூடாம கொறயாம
பாத்துகிட்டாங்க...

அன்னைக்கு சாயந்தரம் வீட்டுக்கு போனதும்,ரொம்ப நேரமா யோசிச்சுகிட்டுருந்தேன்,(என் அம்மா கூட,ஏதோ தம்பி தீவிரமா யோசிக்கிறாப்புல,நாம கும்புடனது வீண்போகலை,நல்ல புத்திய கடவுளு கொடுத்துட்டாரு போலன்னு எங்கக்கா வீட்டுக்கு போனு கூட பண்ணிட்டாங்க ,இனி பய முன்னேறிறுவான்னும் ரெண்டுபேரும் பேசிக்கிறங்க)ஆனா நானோ "நாமளும் ஒரு காரு வாங்கி இந்த ரோட்டில ஒருநாளாவுது ஓட்டியே தீர்றதுன்னு...(நல்லா கவனிங்க "தீர்றது")முடிவு பண்ணிட்டேன்....

முடிவுபண்ணி முழுசா ஒருநாளச்சு,

நானும் ஒவ்வொரு கார்ஷெட்டா தேடிகிட்டிருக்கேன்...அப்ப மறுபடியும் அந்த பயபுள்ள என் ஆபிசுக்கு வந்தான்,

வந்தவன்,ஏன்கைய கெட்டியா புடிச்சுக்கிட்டு"மாப்பிள!உனக்கு கார் வேணுமுன்னு ஊருக்கே சொல்லிருக்கே,எனக்கு மட்டும் சொல்லல...அந்த அளவுக்கு உன் மனசு கல்லாப்போயிருச்சான்னு" சும்மா கண்ணுல கதக்கதன்னு தண்ணி நிக்குது.

நாமதான் பாசமலரயே பல தடவ பார்த்த ஆளச்சே,உடனே நானும்"இல்ல நண்பா,உனக்கு இருக்குற வேலப்பளுவுல நானும் ஏன் தொல்லை கொடுக்கணுமினு?"சொல்லிட்டு "கலங்கின கலங்கில" கண்ணே தெரியல எனக்கு,அந்த அளவுக்கு நமக்கும் கண்ணீருதேன்...

அந்த நேரத்துலயும்... "இவனுக்கு வேலையே,இவன் அக்கா கொழந்தைகள காலைல ஏழற மணிக்கு ஸ்கூல்ல விட்டுட்டு சாயந்தரம் நாலு மணிக்கு, தலைல புத்தகப்பையும்,கைல அதுங்களயும் புடுச்சுகிட்டு கூட்டிட்டுவர்றதத்தவிர வேறொண்ணுமில்லயே"ன்னு எனக்குள்ளாற ஓடுது.

அப்புறம் என்ன பண்றது...

எனக்கான கார அவன்தான் அவனுடைய இடையிறா(!) வேலைகளுக்கு மத்தியில் தேடினான்.அதுக்குள்ள ரெண்டு நாள் போயிருச்சு...

மூணாம்நாளு காலங்காத்தால வீட்டுக்கு வந்தான்,

வந்து"மாப்பிள,நானும் எங்கெல்லாமோ தேட்டிட்டேன்..ஏங்கார மாதிரி ஒரு நல்ல காரு கெடைக்கவேயில்லை..எல்லாரும் ஏமத்து(!) பசங்களா இருக்கானுக...அதனால ஏங்காரயே உனக்கு தரலாம்னு இருக்கேன்,நீ என்ன சொல்ற"அப்படின்னான்...

நமக்குத்தான் வழக்கம்போல கண்ணு கலங்கிறும்மே..அப்புறமென்ன,கண்ண தொடச்சுக்கிட்டு சரிடா வாங்கிக்றேன்னு வாக்கக்கொடுத்துட்டேன்...

வெலபேசுற படலத்துல நானும்,நண்பர் கே(டி).குப்புசாமியும் உக்காந்து பேசினோம்...
அதன் சாராம்சம் பின்வருமாறு:-

கார வாங்கின வெலயான 38,200/-ல பத்துநாள் அவர் ஓட்டினதாகையால் ரூவா 200/-ஐ தேய்மானத்திற்கு கழித்துக்கொண்டு, ரூவா 38,000/-மும்,அதோடு இருந்த வெள்ளக்கலர மேலும் மெருகேற்றிய வகையில் ரூவா 1800/-ம்,முன்னாடி டயர் மற்றும் பின்னாடி டயர்களை மாற்றிய வகையில் ரூவா 4,250/-ம்,வண்டியிலுள்ள பெட்ரோல் ஆறேகால் லிட்டருக்கு ரூவா இருவத்தஞ்சு வீதம் ரூவா 136ம் பைசா 25 ம்மாக மொத்தம் ரூவா 44,186.25/-ல் பெருந்தன்மையாக 25 நயாபைஸாவை குறைத்துக்கொண்டு ரூவா 44,186/-ஐ அன்று மதியம் மணி 12க்குள்கொடுத்து அந்த வெள்ள மயில(ஐயோ...அப்படிதானே சொன்னான்) நான் கைகொள்வது எனவும்,இருதலைப்பட்சமாக(!)அவன் ஒருவனே முடிவு செய்தான்.

அந்தநேரத்தில் எனக்குள்ள ஓடிட்டிருந்தது என்னன்னா,அடுத்து"என் கண்ணையே உன்னிடம் ஒப்படைக்கிறேன்,அதில் ஆனந்தக்கண்ணீரைத்தான் நான் பார்க்கணும்"னு பாசமலர்ல சிவாஜி கணேசன்,ஜெமினிகிட்ட சொல்வாரில்ல... அதுமாதிரி சொல்லிறுவானோன்னுதான்...அதனால,உடனே ஒக்கே சொல்லிட்டேன்....

ஒரு வழியா நான் கண்ட கனவ என் உயிருனும் மேலான நண்பன் திரு.கே.(டி)குப்புச்சாமி என்ற பாசக்கிளியின் உதவியோடு நிறைவேற்றியாச்சுன்னு அன்னக்கி மதியமே எங்க ஊரு அமராவதி பார்ல நண்பர்கள் குழாமோடு பீர ஒடச்சு ஒரே அளப்பற பண்ணியாச்சு போங்க...

எல்லாம் முடிஞ்சு கார்சாவிய கைல வாங்கும்போதுதான் நம்ம ஞாபகத்துகு ஒன்னு வருது...அத ஒங்களுக்கு மட்டும் சொல்றேன்,காதக்கொடுங்க... எனக்கு கார் ஓட்டத்தெரியாதுங்க...

(இனி வரும் வாரங்களில் அதால் நான் பட்டப்பாடும்,என்னால் அது பட்டபாடும் உங்களுக்கு சொல்றேன்...மறக்காம அடுத்தவாரம் வாங்க...)

Wednesday, January 16, 2008

பொங்கலோ பொங்கல்.

ஒரு தமிளன் வீட்டுல,பொங்கல் அன்னிக்கு பொங்க வைக்கலனா எப்படினு...?

முந்தாநாள் சாயங்காலமா நானும் எனது தோழர்களும்(எல்லாரும் ஒத்த(சிங்கிள்) தான்) சேந்து ஒரு மெகாத்திட்டம் போட்டோம்.

இந்த கூத்து ஏன்னு கேக்கறவங்களுக்கு மட்டும் சொல்றேன் கேட்டுக்குங்க...

தாராபுரம் தாலுக்காவில காட்டுக்காரவலசுன்னு ஒரு மெட்ரோசிட்டியிலுருந்து நம்ம கூடபுதுசா வேலைக்கு ஜாயின் பண்ணின பொறியாளநண்பர் ஒருத்தரு,பொங்கலுக்கு பதினஞ்சு நாளுக்கு முன்னாடியிருந்தே கண்ணீரும் கம்பலயுமா திருஞ்சுக்கிட்டிருந்தாரு...

மூணுநாளைக்கு முன்னாடி பெருங்கொரலெடுத்து அழவே ஆரம்பிச்சிட்டாரு...

என்னமோ ஏதோன்னு எல்லோரும் கேக்க போக,அவரு "தைப்பொங்கலன்னைக்கு பொங்க வைக்காத பொழப்பு ஒரு பொழப்பான்னு" கேவிக்கேவி அழறாரு...

தனியொரு தமிளனுக்கு(!) இன்னல்ன்னா எதையோ அழிக்கலாம்னு நம்ம கவிஞர் ஒருத்தரு(அது யாருங்க...?நம்ம வாலியோ,வைரமுத்தோ...சரியா யாபகம் வரமாட்டேங்குதுங்க...)சொல்லியிருப்பது இந்த நேரத்துலயா எனக்கு ஞாபகம் வரணும்,சரி எப்பிடியோ வந்துருச்சு...விடுங்க...!

இனி ஆகப்போறத பாப்பம்னு,கண்ணத்தொடைக்க அவரு கைல ஒரு பாக்ஸு டிஸ்ஸு பேப்பர கொடுத்துட்டு...தேவயானப்பொருளு என்னென்னனு லிஸ்டப்போட்டேன்...

எதுக்குன்னு கேக்கிறீங்களா...?

சரியாப்போச்சு பொங்கலுக்குத்தேன்...

ஆரம்பிச்சாச்சு...

அங்க இங்கனு சேகரச்ச தகவல்கள வச்சுக்கிட்டு பாற்கடலும்,மத்தும் இல்லாம அமிர்தமே தயாரிச்சிருல்லாம் அப்பிடிங்கற அளவுல நம்ம கான்ஃபிடடன்ட்டு கன்னாபின்னானு ஏறிப்போச்சு...

ஆனா பொங்கலு தயாரிக்கறது ஏதோ பொன்கல்லு தயாரிக்கறமாதிரின்னு அடுப்புல பொங்கப்பானய வச்சதுக்கப்பறந்தான் என் ஸிக்ஸ்த்து ஸென்ஸு மெதுவா அலாரம் அடிக்குது...

நம்ம நண்பருவேற பக்கத்துலேயே நின்னுகிட்டு இப்பவும் மூக்க உறுஞ்சிக்கிட்டே கண்ணக்கண்ண தொடச்சிகிட்டிறுக்காரு ஆன இது ஆனந்தக்கண்ணீரு...

கடவுள் மேலே பெரும் பரத்த போட்டு கண்டின்யு பண்ணினேன்...

ஒருவழியா பொங்கல் பொங்கி நம்ம நண்பரும் "பொங்கலோ பொங்கல்"-"பொங்கலோ பொங்கல்"னு உணர்ச்சிப்பெருக்குல கத்துனது அவிங்க ஊருக்கே கேட்டுச்சுன்னு அவிங்க அப்பாரு போனில கூப்பிட்டு சொல்வாருன்னு நினைக்கறேன்.

இருங்க...இருங்க...

இனிதான் இருக்குது க்ளைமாக்ஸு...

பொங்கல் இந்த அளவுள பொங்கினுது ஏதோ நாம கும்புடர சாமி சக்தியுள்ள சாமின்னு இதோட நிறுத்தியிருக்கலாம்...

அத விட்டுட்டு...

சக்கரபொங்கலும் இப்பவே செஞ்சுருவோம்னு ரெண்டு கிலோ சக்கரைய உள்ளே கொட்டி,சும்மா ஸ்டைலா கிளறுனேன்...பாருங்க...ஏங்கண்ணே பட்டுரும்...ஸ்டைல்னா அப்படி ஒரு ஸ்டைல்...

ஆனா ரெண்டு நிமிஷத்துக்கப்பறம்...

கரண்டியோட சேர்த்து பானையும் சுத்திசுத்தி வர்றதும்,எவ்வளவோ ட்ரை பண்ணியும் கரண்டிய ஏன் வெளில எடுக்கமுடியலைங்கறதும்,அதற்கு மேலா எனது காட்டுக்காரன்வலசு நண்பர் என்னை முறைத்து பார்த்தது,அதுல ஏன் கொலவெறி இருந்தது?நான் ஏன்...?மெதுவா அப்படியே கிளம்பி ஏங்கார ஸ்டார்ட் பண்ணி திரும்பி,திரும்பி பார்த்துட்டே வேகமா வீட்டுக்கு வந்து கதவ பூட்டிட்டு உள்ளேயே அமைதியாக உட்கார்ந்துக்கிட்டிறுக்கறதும்...

ஏன்னு எனக்கு இன்னும் புரியலங்க...!!!

Tuesday, January 15, 2008

உலகப்புகழ்(!) பெற்ற எனது புகைப்படங்களில் ஒன்று.


படத்த பாத்துட்டு கண்டிப்பா பி.சி.ஸ்ரீராம் இல்ல கே.வி.ஆனந்து இப்படி யாரோ போட்டோக்கலையில ஸீட்(Seed அதாவது கொட்டை) போட்ட ஒருபெரிய புள்ளி எடுத்ததுனு நீங்க நினைக்கறது ஏங்காதுலயே கேக்குதுங்க...

ஆனா உண்மைய தவிர வேறெதுவும் பேசறதில்லங்கிறது நம்ம கொள்கையாக இருப்பதால்...இருங்க இருங்க சொல்லிர்றேன்...


படுபயங்கரமா,ஓய்வு ஒழிச்சல் இல்லாம வேலை செய்கிறோமினு எங்க கம்பெனி நினைத்ததால் (ஆனா... நாங்க என்னமோ வேலை செய்யறது ஒரு நாளைக்கு மொத்தமே முணேமுக்கா மணி நேரந்தான்ங்கறது வேற கத)சுற்றுலா ஒண்ணு ஏற்பாடு பண்ணிணாங்க...

அப்படி பொழுதுபோக்க போன எடத்துல பொழுதுபோகாம,நட்டநடுராத்திரியில,கைல இருந்த டார்ச்லைட்ட வச்சுக்கிட்டு என்ன பண்ணலாம்னு யோசித்ததின் விளைவு இந்த புகைப்படம் என்பதை... என்பதை...


இப்ப என்ன சொல்லிட்டன்னு அருவாள தூக்கறீங்க...

இப்படியெல்லாம் கோபப்பட்டால் உடம்புக்கு ஆகாது...

ஆமா சொல்லிப்புட்டேன்...

Saturday, January 12, 2008


வலைல பதிவ போட்டு சும்மா தூள் கிளப்புற எல்லோருக்கும் வணக்கம்ங்ணா...தமி'ள' காப்பாத்தற குருப்புல என்னையும் கொஞ்சம் சேத்துக்கங்ணா...நானும் எல்லாரையும் போல நல்லா மொக்க போட்டு நம்ம குலப்பெருமய(!) கொஞ்சங்கூட கூடக்கொறயாம பாத்துக்கறங்ணா...

என்னா திடீருனுன்னு...? கேக்கறீங்க..புறியுது...எல்லாம் கடந்த நாளஞ்சு நாளாத்தென்... படுத்தா தூங்க முடியல எந்திரிச்சா ஒக்கார முடியல...ஏதாவது மூலங்கீலமா இருக்குமுனு நெனக்காதிக...எல்லா நம்ப பதிவுக செஞ்ச வேலைதேன்...அத்தினி மொக்க பதிவயும் படிச்சிபுட்டு த்தான் இத்தன பாடும்..

கடசீல... நேத்து ராத்திரி... யம்மா... அடச்சி அது இல்லீங்க... நேத்து அர்த்த ராத்திரியில(அர்த்த ராத்திரி என்பது எங்க பாஷையில் காலை 5மணி,அதிகாலை என்பது முற்பகல் 11ண்ணு இல்லை 12மணி என்பதை இந்த நேரத்தில் சொல்ல விரும்புகிறேன்)கண்ட கனவுதான் இத்தன ரவுசுக்கும் காரணமுங்ணா...

அப்புறம் நமக்கு ஊரு எதுனு கேக்கறீங்களா...?பொறந்தது புதுகோட்டைங்ணா... தவழ்ந்தது நடந்தது எல்லாம் கோயமுத்தூர்ன்ங்க்ணா...ஓடினது மட்டும் வெளிநாட்டுக்குங்ணா...

நெறய சேதி இருக்குதுங்ணா சொல்லறதுக்கு...வர்ர வாரத்திலிருந்து எல்லாத்தியும் சொல்றங்ணா...

"நான் வந்த பாதை,வரும் பாதை மற்றும் வரப்போகும் பாதைகள் பற்றிய என் பதிவுகளின்றி வேறொன்றுமில்லை பராபரமே"...

அப்புறம் வர்ரணுங்ணா...
பின்குறிப்பு: போட்டோல பாருங்க இனி என்னவெல்லாம் வலப்பதிவுல நடக்கப்போவுதோங்கிற பெருங்கவலைல திரும்பி உக்காந்துட்டிருக்கிற ரெண்டுபேர பத்தி சத்தியமா எனக்கு எதுவும் தெரியாதுங்க...ஆனா ப்ரம்ம புடிச்சமாதிரி அதே கவலைல ஒருத்தர் உக்காந்துட்டு இருக்காரே அவரு என்னுடைய சக பொறியாளர்.