Sunday, January 27, 2008

காரு வாங்கின கதை.

(இது நடந்து வருஷம் 12 ஆச்சுங்க,இருந்தாலும் இன்னக்கி இத நெனைச்சாலும் தூக்கம் வரமாட்டேங்குதுங்க...அத நீங்களும் தான் தெருஞ்ச்சுக்கங்களேன்...)

எல்லோரும் காரு வாங்கிட்டாங்க... நாம மட்டும் என்ன மட்டமான்னு ஒரு பத்து நாளாவே மனசுல ஒரு வெசனம் வந்துருச்சுங்க...

ஏற்கனவே இடுப்பு வரைக்கும் எறியிர நெருப்புல நம்ம ராமர்ப்பிள்ளை தயாரிச்ச மூலிகை பெட்ரோல் ஒரு முழு பேரல ஊத்துனமாதிரி ஒடனே அணைஞ்சுப்போச்சு ...

என் நண்பன் திருவாளர் கே(டி).குப்புச்சாமி அவர்களும் ஒரு அம்பாசடர் கார,ஒன்ஸ் அப்பான் எ டைமுல,இந்தியாவுல அம்பாசடர்ன்னு ஒரு லாரி மன்னிக்கவும்,காரு இருந்தது இப்ப என்சோட்டு மக்களுக்கு தெரிந்து இருக்கும்,தெரியாதவங்க பெரியவங்கள கேட்டுத்தெருஞ்சுக்கங்க...

இரண்டாம் கையா(அதாங்க..ஸெகண்ட் ஹேண்ட்)ரூவா 38200/-(ரூபா முப்பத்தி எட்டயாரத்து இருநூறு மட்டும்...சத்தியமா இப்படிதாங்க செக் எழுதினான்)வாங்கிட்டாருங்க...டாருங்க என்ன டானுங்க...(வயித்தெருச்சலுன்னு...நீங்க இப்படி ஏங்காது படவே சொல்றது அவ்வளவு நல்லாயில்லங்க...)

வாங்கனதோடல்லாம,அத எடுத்துக்கிட்டு ஒரு நாளைக்கு நாளு தடவ என் ஆபிசுக்கு வந்து,விரல்ல காரு சாவிய சுத்திக்கிட்டே"மாப்பிளேய்,காபி சாப்பிடப்போலாம் வர்றியான்னும் ...

இந்த பக்கம் ஒரு வேலைய வந்தேன் அப்படியே ஓ நாபகம் வந்ததுன்னும்...(என் ஆபிசுக்கும் அவன் வீட்டுக்கும் நடுவுல மொத்தமே முணு வீடுதான்ங்கிற தகவல் உங்களுக்குக் தெரியாது இல்லியா) பண்ண டார்ச்சரு ஒரு கணக்குவழக்கே இல்லாம போயிர்ருச்சு.

அதுமட்டுமில்லாம என் ஆபிசுல இருந்த பொண்ணுக அவன் வந்ததும் வராததுமா, "காபி சாப்பிடுங்க"ங்கறதும் அவன் இல்ல இப்பத்தான் சாப்பிட்டங்கறதும்...(இதே மொதல்ல அவன் காபி வேணுமினு கேட்டாக்கூட,அவிங்க காது என்னமோ பிறவியிலிருந்தே கேக்காது மாதிரி இருப்பாங்க)என் வயித்தெரிச்சல கூடாம கொறயாம
பாத்துகிட்டாங்க...

அன்னைக்கு சாயந்தரம் வீட்டுக்கு போனதும்,ரொம்ப நேரமா யோசிச்சுகிட்டுருந்தேன்,(என் அம்மா கூட,ஏதோ தம்பி தீவிரமா யோசிக்கிறாப்புல,நாம கும்புடனது வீண்போகலை,நல்ல புத்திய கடவுளு கொடுத்துட்டாரு போலன்னு எங்கக்கா வீட்டுக்கு போனு கூட பண்ணிட்டாங்க ,இனி பய முன்னேறிறுவான்னும் ரெண்டுபேரும் பேசிக்கிறங்க)ஆனா நானோ "நாமளும் ஒரு காரு வாங்கி இந்த ரோட்டில ஒருநாளாவுது ஓட்டியே தீர்றதுன்னு...(நல்லா கவனிங்க "தீர்றது")முடிவு பண்ணிட்டேன்....

முடிவுபண்ணி முழுசா ஒருநாளச்சு,

நானும் ஒவ்வொரு கார்ஷெட்டா தேடிகிட்டிருக்கேன்...அப்ப மறுபடியும் அந்த பயபுள்ள என் ஆபிசுக்கு வந்தான்,

வந்தவன்,ஏன்கைய கெட்டியா புடிச்சுக்கிட்டு"மாப்பிள!உனக்கு கார் வேணுமுன்னு ஊருக்கே சொல்லிருக்கே,எனக்கு மட்டும் சொல்லல...அந்த அளவுக்கு உன் மனசு கல்லாப்போயிருச்சான்னு" சும்மா கண்ணுல கதக்கதன்னு தண்ணி நிக்குது.

நாமதான் பாசமலரயே பல தடவ பார்த்த ஆளச்சே,உடனே நானும்"இல்ல நண்பா,உனக்கு இருக்குற வேலப்பளுவுல நானும் ஏன் தொல்லை கொடுக்கணுமினு?"சொல்லிட்டு "கலங்கின கலங்கில" கண்ணே தெரியல எனக்கு,அந்த அளவுக்கு நமக்கும் கண்ணீருதேன்...

அந்த நேரத்துலயும்... "இவனுக்கு வேலையே,இவன் அக்கா கொழந்தைகள காலைல ஏழற மணிக்கு ஸ்கூல்ல விட்டுட்டு சாயந்தரம் நாலு மணிக்கு, தலைல புத்தகப்பையும்,கைல அதுங்களயும் புடுச்சுகிட்டு கூட்டிட்டுவர்றதத்தவிர வேறொண்ணுமில்லயே"ன்னு எனக்குள்ளாற ஓடுது.

அப்புறம் என்ன பண்றது...

எனக்கான கார அவன்தான் அவனுடைய இடையிறா(!) வேலைகளுக்கு மத்தியில் தேடினான்.அதுக்குள்ள ரெண்டு நாள் போயிருச்சு...

மூணாம்நாளு காலங்காத்தால வீட்டுக்கு வந்தான்,

வந்து"மாப்பிள,நானும் எங்கெல்லாமோ தேட்டிட்டேன்..ஏங்கார மாதிரி ஒரு நல்ல காரு கெடைக்கவேயில்லை..எல்லாரும் ஏமத்து(!) பசங்களா இருக்கானுக...அதனால ஏங்காரயே உனக்கு தரலாம்னு இருக்கேன்,நீ என்ன சொல்ற"அப்படின்னான்...

நமக்குத்தான் வழக்கம்போல கண்ணு கலங்கிறும்மே..அப்புறமென்ன,கண்ண தொடச்சுக்கிட்டு சரிடா வாங்கிக்றேன்னு வாக்கக்கொடுத்துட்டேன்...

வெலபேசுற படலத்துல நானும்,நண்பர் கே(டி).குப்புசாமியும் உக்காந்து பேசினோம்...
அதன் சாராம்சம் பின்வருமாறு:-

கார வாங்கின வெலயான 38,200/-ல பத்துநாள் அவர் ஓட்டினதாகையால் ரூவா 200/-ஐ தேய்மானத்திற்கு கழித்துக்கொண்டு, ரூவா 38,000/-மும்,அதோடு இருந்த வெள்ளக்கலர மேலும் மெருகேற்றிய வகையில் ரூவா 1800/-ம்,முன்னாடி டயர் மற்றும் பின்னாடி டயர்களை மாற்றிய வகையில் ரூவா 4,250/-ம்,வண்டியிலுள்ள பெட்ரோல் ஆறேகால் லிட்டருக்கு ரூவா இருவத்தஞ்சு வீதம் ரூவா 136ம் பைசா 25 ம்மாக மொத்தம் ரூவா 44,186.25/-ல் பெருந்தன்மையாக 25 நயாபைஸாவை குறைத்துக்கொண்டு ரூவா 44,186/-ஐ அன்று மதியம் மணி 12க்குள்கொடுத்து அந்த வெள்ள மயில(ஐயோ...அப்படிதானே சொன்னான்) நான் கைகொள்வது எனவும்,இருதலைப்பட்சமாக(!)அவன் ஒருவனே முடிவு செய்தான்.

அந்தநேரத்தில் எனக்குள்ள ஓடிட்டிருந்தது என்னன்னா,அடுத்து"என் கண்ணையே உன்னிடம் ஒப்படைக்கிறேன்,அதில் ஆனந்தக்கண்ணீரைத்தான் நான் பார்க்கணும்"னு பாசமலர்ல சிவாஜி கணேசன்,ஜெமினிகிட்ட சொல்வாரில்ல... அதுமாதிரி சொல்லிறுவானோன்னுதான்...அதனால,உடனே ஒக்கே சொல்லிட்டேன்....

ஒரு வழியா நான் கண்ட கனவ என் உயிருனும் மேலான நண்பன் திரு.கே.(டி)குப்புச்சாமி என்ற பாசக்கிளியின் உதவியோடு நிறைவேற்றியாச்சுன்னு அன்னக்கி மதியமே எங்க ஊரு அமராவதி பார்ல நண்பர்கள் குழாமோடு பீர ஒடச்சு ஒரே அளப்பற பண்ணியாச்சு போங்க...

எல்லாம் முடிஞ்சு கார்சாவிய கைல வாங்கும்போதுதான் நம்ம ஞாபகத்துகு ஒன்னு வருது...அத ஒங்களுக்கு மட்டும் சொல்றேன்,காதக்கொடுங்க... எனக்கு கார் ஓட்டத்தெரியாதுங்க...

(இனி வரும் வாரங்களில் அதால் நான் பட்டப்பாடும்,என்னால் அது பட்டபாடும் உங்களுக்கு சொல்றேன்...மறக்காம அடுத்தவாரம் வாங்க...)

No comments: